Followers

Monday 2 June 2014

பால்யத்தின் வாசனை....



பாலும், பருப்பு சாதமும்,
அம்மா மடியும் இருக்கும் வரை
பால்யம் முடிவு பெறாத ஒன்றாகவே
என்னில் நகர்ந்தது.

நகரத்து நெரிசலில் எல்லாம்
தொலைந்துவிடாமல்
இருக்க பத்திரமாய் பிடித்துக்
கொண்டேன் என் பால்யத்தை

கை நிறைய எண்ணையை
தலையில் தேய்த்து வாரி
முடிந்துவிடுவாள் அம்மா.
 நெற்றியில் வழியும் எண்ணை 
வாசத்தோடு வழிந்தது
என் பால்யம்.

பின்பொரு நாளில் மிதிவண்டிகளின்
அணிவகுப்பில் சாலையைக் கடக்க
பயந்து இறுகக் கண்களை
மூடிக்கொள்ள கண் இமைக்குள்
இமைக்காமல் ஒழிந்துக் கொண்டது
என் பால்யம்.

நூலகத்தின் அலமாரிகளில்
தெனாலிராமன் கதைகளில்
விலாசம் தேடிக் கொண்டே
திரிந்தது
என் பால்யம்.

சொப்பு, சாமானெல்லாம்
பரணுக்கு குடிபெயர,
பொம்மைக்கு தலையணையில்
இடம் விட்டு படுக்கும் வரை
இரவெல்லாம் உறங்காமல்
விழித்திருந்தது
என் பால்யம். 

அம்மன் கோவில் திருவிழாக்களில்
பஞ்சு மிட்டாயின்
பிசுபிசுப்போடும், குச்சி ஐஸின்
உருகும் ஈரத்தோடும்
கைத் துடைக்கப்பட்ட
பட்டுப்பாவடைகளில்
நினைவுச்சின்னங்களாய்
ஒட்டிக் கொண்டே வந்தது
என் பால்யம்.

அம்மாவிடம் மறைக்காமல் 
நடந்த அத்தனையும் வீட்டுப்பாடமாய்
அறைத்தூக்கத்தோடு ஒப்பித்துவிட,
அம்மாவின் ”ம்” கொட்டலில்
இசையோடு தொடர்ந்தது
என் பால்யம்.

முதன் முதலாய் அவன்
சட்டையோடு சாய்ந்துக்
கொள்ள பால்யத்தின் வாசனை
மறைந்து போய்விட்டதாகவே
தோன்றியது.

அவன் நினைவுகளை
மறைத்து மறைத்து
சேமிக்கையில் எல்லாம்
என் பால்யம்  செலவாகிக்
கொண்டே போனது.

கூட்டத்தை தவிர்த்து
அவனுக்காய் தனிமையை
தேடிய போதெல்லாம்
பால்யம் எனை விட்டு
ஓடியே போனது.

அம்மாவிடம் மறைத்த
அத்தனையும் அவனிடம்
மறைக்காமல் சொல்லிவிட
அங்கே முடிந்து, இங்கே தொடங்கியது
என் பால்யம்.

பயம் என்ற ஒற்றைக் கூட்டை
உடைத்து தெளிவோடே பிறந்தது
புதிதாய் என் பால்யத்தின் வாசனை......


No comments:

Post a Comment